பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!

 

கொரோனா கால கட்டத்தில் அரசு ஏற்பாட்டில் விடுதியில் தங்கி இருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சக மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்த போது கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சுழற்சிமுறையில் பணியை மேற்கொள்ள, சுகாதாரத் துறை சார்பில் தனியார் ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனியார் ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் வேறு அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

விடுதியில் தங்கி இருந்தபோது, மருத்துவர் வெற்றிச்செல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வெற்றி செல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post