இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்த கனிமொழி MP.! - கமல்ஹாசன், நாளை ராகுல் காந்தியின் பேரணியில் இணைந்து நடைபயணம்.!

 

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணம் (பாதயாத்திரை) நாளை டெல்லியில் நுழைகிறது. முன்னதாக ஹரியானாவில் இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் திமுக துணை பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி இணைந்தார். 

டெல்லியில் நாளை ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைய உள்ளனர். கொரோனா பரவல் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை டெல்லியில் கால் வைக்க இருக்கிறது.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மையமாக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை செப்டம்பர் 7-ல் ராகுல் காந்தி தொடங்கினார். கன்னியாகுமரியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் யாத்திரையை தொடங்கி வைத்தார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து ஹரியானாவில் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நாளை ராகுல் காந்தியின் யாத்திரையிலும் கனிமொழி எம்.பி. பங்கேற்க உள்ளார்.அவருடன் திமுக உள்ளிட்ட காங்கிரஸின் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பலரும் ராகுல் யாத்திரையில் இணையக் கூடும். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நாளை ராகுல் காந்தியின் பேரணியில் இணைந்து நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று டெல்லி செல்கிறார்.

ராகுல் காந்தியின் யாத்திரை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post