சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் குடும்பமே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதிக்குள் வரும் தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாலாறு பகுதியில் நான்கு சடலங்கள் மிதப்பதாகக் கால்நடை மேய்ப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனத்துறைக்கு சார்ந்தது என்பதால் பவானி கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்த வர்ஷினி தலைமையில் வந்த காவல்துறையினர் பரிசல் மூலம் சென்று இறந்து போன நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தில் இருந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்டவர் சேலம் தாதகாப்பட்டி, நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் - பான்விழி தம்பதியினருக்கு 7 வயதில் நிதிக்ஷா என்ற மகளும், 5 வயதில் அக்சரா என்ற மகளும் இருந்தனர்.
யுவராஜ் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி டைல்ஸ் கடையிலும் வேலை செய்து வந்தனர். 7 வயது சிறுமியான நிதிஷாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்காக அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி அக்ஷராவுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாகவே யுவராஜ் தம்பதியினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி தவித்து வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் நீரிழிவி நோயால் சிரமப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள்களுக்கு புத்தாடை அணிவித்து வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ் தம்பதியினர், தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காவிரி ஆற்றில் 2 மகள்களையும் தூக்கி வீசி கொலை செய்ததோடு, தாங்களும் குதித்து விபரீதமாக உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.
நீரிழிவு நோயால் பாதித்த இரண்டு மகள்களின் பரிதாப நிலையை பார்க்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.