தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்த தெற்கு ரயில்வேயின் பொது மேலாளரிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், "தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி – கோவைக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்க வேண்டும்.
தூத்துக்குடியைச் சுற்றியுள்ள தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வட மாநிலங்களுக்கு செல்வதற்காக வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு ஒவ்வொரு மணி நேர இடையே தூத்துக்குடியிலிருந்து ஷட்டில் ரயில்கள் இயக்க வேண்டும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் தொடுதிரை சிஸ்டமை மீண்டும் அமைக்க வேண்டும். தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் உள்ள இரண்டு முன்பதிவு கவுண்டரில் தற்போது ஒரு முன்பதிவு கவுண்டர் மட்டுமே உள்ளது. எனவே பொதுமக்களின் கூட்டத்தைக் குறைக்க மேலும் ஒரு முன்பதிவு கவுண்டர் அமைக்க வேண்டும். முத்துநகர் எக்ஸ்பிரஸில் உள்ள பழைய பெட்டிகளுக்குப் பதிலாக புதிய பெட்டிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.