தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கினார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தை மிக பிரமாண்டமான அளவில் மேம்படுத்தி வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் சுமாா் 13,500 சதுர மீட்டா் பரப்பளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலான சமயங்களில் மணிக்கு 600 பயணிகளை கையாளும் வகையில், புதிய விமான நிலைய முனையம் கட்டப்படுகிறது. அதிகப் பயணிகளை தாங்கிச் செல்லும் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கான ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும், ஏ-321 ரக விமானங்கள் நிற்பதற்கான புதிய 5 ஏப்ரான் கட்டுமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், தொழில்நுட்ப வசதிகளுக்கான பகுதிகள், புதிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகளோடு புதிய முனையக் கட்டடம், பாா்கிங், அணுகு சாலை போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மேம்பட்டு விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விமான விமான நிலைய விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (28.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விமான நிலைய விரிவாக்க பணிகளின்போது மின்கம்பங்களை மாற்றி அமைப்பது குறித்தும், பொதுப்பாதை தொடர்பாகவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணிகளின் தற்போதைய நிலை குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் நியாய விலைக்கடையில் "ஒரே நாடு ஒரே கடை" திட்டத்தின் கீழ், வழங்கப்படும் ரேசன் பொருட்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விமான நிலைய இயக்குநர் பி.சிவபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், வட்டாட்சியர் செல்வக்குமார், விமான நிலைய உதவி பொது மேலாளர் சுவாகின் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.