திருப்பத்தூர் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களை அங்குள்ள டி.எஸ்.பி, ஆபாச வார்த்தைகளில் பேசி டார்ச்சர் செய்யும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைர லாகியுள்ளது. திருப்பத்தூர் டிஎஸ்பி விநாயகம் மீது ஆயுதப் படை காவலர்கள் முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து வெளியாகியிருக்கும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
அனைவருக்கும் வணக்கம்.
நாங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்து வருகிறோம் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. ஆயுதப்படைக்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள துணை காவல் கண்கணிப்பாளர் விநாயகம் அவர்கள் தான் அதற்கு காரணம்.
திருமணத்திற்கு எங்களது ஈட்டிய விடுப்பு 30நாட்கள் கேட்டால் 7நாட்கள் தருவது மருத்துவ சிகிச்சை எடுக்க 30நாட்கள் கேட்டால் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு தந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்புவது வாரந்திர ஓய்வு கேட்டால் இல்லை என்று வாரந்திர ஓய்வு மனுவை முகத்தில் தூக்கி வீசி அவமானப்படுத்துகிறார்.
அதற்கு மேல் எங்கள் விடுப்பை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கும் காவலர்களை மெமோ குடுத்து சம்பளம் வராமல் புரோமஷன் வராமல் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இவர் அவரது ஜாதி காவலர்களுக்கு மட்டும் கேட்கும் விடுப்பை அப்படியே தந்து விடுகிறார்.
ஆயுதபடையில் அடிப்படை வசதியான தங்கும் இடம் கழிவறை எதுவும் இல்லை, இருந்தாலும் பணி முடித்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே தங்க வைக்கிறார். ஆயுத படையில் பணி புரியும் காவலர்கள் 90% பேர் கல்யாணம் ஆனவர்களே. இதனால் மிகுந்த மனஉளைச்சளுக்கு ஆளாகி உள்ளதால் எந்த நேரத்திலும் எந்த காவலரும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புண்டு.
அப்படி எதாவது தற்கொலை நிகழ்ந்தால் அதற்கு காரணம் டி.எஸ்.பி விநாயகம் அவரே முழு பொறுப்பு. மேலும் தமிழ்நாட்டிலயே எந்தவொரு டிஎஸ்பி-யும் தங்களது சொந்த மாவட்டத்தில் பணி புரிவதில்லை. இவர் மட்டும் எப்படி இங்கு பணி மாற்றம் செய்து வந்தார் என்பது மேல் அதிகாரிகளுக்கு தெரியவில்லையோ. இவர் சொந்த ஊரு ஆலங்காயம் அருகில் உள்ள மிட்டூர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல் தற்போது அவர் ஆசிரியர் நகரில் புதியதாக வீடுகட்டி வசித்து வருகிறார்.இதற்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஒவ்வொரு ஆயுத படை காவலரும் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி உங்களிடம் எங்களுது கஷ்டங்களை முறையிடுகிறோம், அதே போன்று இரண்டு பெண் ஆய்வாளர்களும் சேர்ந்து அங்கு பணிபுரியும் பெண் மற்றும் ஆண் காவலர்களை மிகவும் கேவலமாக நடத்துவதாக குறிப்பிட்டு அந்த கடிதம் முடிவடைகிறது.
கூடவே அந்த கடிதத்தின் நகல்
பத்திரிக்கை நண்பர்கள், காவல் கண்கணிப்பாளர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், காவல் துறை துணை தலைவர் ( வேலூர் சரகம் ) காவல் துறை தலைவர் அவர்கள் (வடக்கு மண்டலம் )
காவல் துறை இயக்குனர் அவர்கள் (சென்னை ) முதலமைச்சர் தனி பிரிவு. ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.