திருப்பூரில் இந்தி பேசக்கூடிய வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வரவேற்கும் விதமாக ‘ காம் கேலியே.. ஆத்மி சாயியே’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டு உள்ள இந்தி பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக பரபரப்பு.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆர்டர்கள் குறைந்து வேலை இல்லை என பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்கள் வேலை இல்லாமல் புலம்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் வேலைக்கு ஆள் வேண்டும் நுற்பாலை, டையிங், காம்பேக்ட்டிங், எம்ராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதுவும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, ஹிந்தி மொழியில் மட்டும் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது தமிழக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் தமிழக தொழிலாலர்களுக்கு திருப்பூரில் வேலை இல்லை என்ற பேச்சு உலவி வரும் நிலையில், மறுபக்கம் வடமாநில தொழிலாளர்களை வரவேற்கும் விதமாக ’காம் கேலியே... ’ ஆத்மி சாயியே... என்ற தலைப்பில் இந்தியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஹோர்டிங் தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ‘திருப்பூர் பனியன் நிறுவனங்களில் நூல் விலை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ஆர்டர்கள் குறைந்திருக்கும் நிலையில், திருப்பூரை சார்ந்த தமிழக தொழிலாளர்களுக்கு வேலையும் குறைந்து இருக்கிறது. தொடர்ச்சியாக இல்லாமல் வாரத்தில் சிலநாட்கள் மட்டுமே வேலை இருக்கிறது. இதனால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதே நேரம் வடமாநிலத்தில் இருந்து வரும் வடமாநில தொழிலாளர்கள், வறுமை காரணமாக இங்கு வந்து குறைந்த சம்பளத்துக்கு பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் கேட்காததாலும், கொடுப்பதை வாங்கிக் கொண்டு நிறுவன வளாகத்திலேயே தங்கி எந்தநேரமும் பணியாற்றுகிறார்கள். இது ஒருவகையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியே ஆகும். ஆனால் வடமாநில தொழிலாளர்களின் இந்த வகையிலான பணி காரணமாக வடமாநில தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளை அளித்து விட்டு, தமிழக தொழிலாளர்களை புறக்கணிக்கிறார்கள். என்றனர்.
திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘திருப்பூரின் பனியன் தொழிலே அர்ப்பணிப்பால் தான் வளர்ந்தது. ஆரம்ப காலத்தில் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் வேலை பார்த்து குறிப்பிட்ட காலத்தில் ஆர்டர்களை முடித்து தந்தார்கள். ஆனால் தற்போது, தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ச்சியாக வேலை பார்க்க தயக்கம் காட்டுவதும், வடமாநில தொழிலாளர்கள் காலநேரமின்றி அயராமல் வேலை பார்ப்பதும், திருப்பூரில் இந்த மாற்றத்தை உருவாக்கி வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் தமிழக தொழிற்களங்களை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும் என்றால் தமிழக தொழிலாளர்கள் தொழில் நிலைமையை உணர்ந்து அயராமல் பணியாற்றும் நிலைக்கு வர வேண்டும். என்றார்.
திருப்பூரில் கள நிலவரங்களை பார்க்கும் போது, வருங்காலத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதை தடுக்க தமிழக தொழிலாளர்கள் விழித்துக் கொள்வது அவசியம்.