தூத்துக்குடி, விளாத்திகுளம் நாடார் வீதி பகுதியை சேர்ந்தவர் ராமர் மனைவி பத்மா தேவி (40), கணவரை பிரிந்து வாழும் இவர், அப்பகுதியை சார்ந்த பூபதியிடம் 2017 ஆம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதில் இதுவரை மாதம் 12 ரூபாய் வீதம், 7 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் கேட்டு அவர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து தனது வீட்டையும் அபகரித்துக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் மேலும் தனது மகனையும் தம்பியையும் கடத்தி விடுவதாகவும் கூறிய அவர் தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கேனை பறிமுதல் செய்ததுடன் தலையில் தண்ணீரை ஊற்றினர்.பின்னர், அவரை அழைத்துக்கொண்டு சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.