தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுடலையாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி - திருச்செந்தூர் மற்றும் துறைமுகம் -மதுரை பைபாஸ் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை வரவேற்கிறோம். அந்த பணிகள் நடைபெறும் அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் முறைபடுத்தல் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தினசரி அவதிபடுகின்றனர். அப்பகுதியில் மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேல் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால் தொடர்ந்து அங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சிறப்பு கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அந்த மனுவில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.