கொரோனா பெருந்தொற்றின் போது, ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பயணிகளுக்கு வசதியை வழங்கவும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது.
சிறப்பு ரயில்களின் கட்டணம் சாதாரண ரயிலை விட அதிகம். சுமார் 70 சதவீத பயணிகள் ரயில்களுக்கு மெயில் எக்ஸ்பிரஸ் அந்தஸ்தை ரயில்வே வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், சிறப்பு ரயில்களை மட்டுமே ரயில்வே இயக்குகிறது.
நீண்ட தூர ரயில்களில் துவங்கி, தற்போது, குறுகிய தூர பயணிகள் ரயில்கள் கூட சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்ய பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
அதீத கட்டணங்களால் ஏராளமான இந்திய குடிமக்கள் பயணம் செய்வதில் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கிறார்கள்.
கடந்த ஆண்டு, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான சிறப்பு குறிச்சொல்லை நிறுத்திவிட்டு, தொற்றுநோய்க்கு முந்தைய டிக்கெட் விலையை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கான உத்தரவை இந்திய ரயில்வே பிறப்பித்துள்ளது.
மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நவம்பர் 12, 2021 அன்று, "விரைவில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை ரத்து செய்ய உத்தரவு மற்றும் வழக்கமான ரயில்களில் சாதாரண டிக்கெட் கட்டணத்தை அறிவிக்க முடிவு எடுக்கப்படும்" என்றார். ஆனால், இன்னும் அனைத்து பயணிகள் ரயில்களும் எக்ஸ்பிரஸ் கட்டணத்துடன் இயங்குகின்றன.
எனவே, "வழக்கமான ரயில்களில் சாதாரண டிக்கெட் கட்டணத்தை எப்போது அறிவிக்க முடிவு செய்யப்படும்? மற்றும் அனைத்து ரயில்களிலும் மூத்த குடிமக்கள் சலுகை எப்போது மீண்டும் தொடங்கப்படும்?" என்று ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கையாகவும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாகவும் கேள்வி எழுப்பினார் பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் கலீல் பாகவீ.
அதற்கு ரயில்வே வாரியம், "20.03.2020 முதல் 4 வகை திவ்யங்ஜன்கள் (மாற்றுத் திறனாளிகள்), 11 வகை நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கான சலுகைகள் தவிர அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 2019-20 ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசாங்கம் ரூ. 59,837 கோடி மானியம் வழங்கியது. இது ரயில்வேயில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 53 சதவீத சலுகையாக உள்ளது. இந்த மானியம் அனைத்து பயணிகளுக்கும் தொடர்கிறது. திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட பல பிரிவினருக்கு இந்த மானியத் தொகையைத் தாண்டிய கூடுதல் சலுகைகள் தொடர்கின்றன. ரயிலின் வகைப்பாட்டின் படி டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என்று பதில் தந்துள்ளது.
அதாவது பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படும், மூத்த குடிமக்கள் சலுகை வழங்கப்பட மாட்டாது என மக்கள் விரோத பதிலை தந்துள்ளது.
சிறப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையில் ஈடுபடும் ரயில்வே வாரியத்தின் இந்த மக்கள் விரோத செயலை தடுத்து நிறுத்தி மக்களுக்கான ரயில்களாக இயங்க வைக்கப் போவது யார்?
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து அவையில் கேள்வி எழுப்பி மக்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.