பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பீலே (82). பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஓராண்டாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலையே நீடித்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே காலமானதை அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
3 முறை உலகக் கோப்பை கால்பந்து (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்றவர் பீலே. 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார்.
ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருந்தார்.
கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத் துறை அமைச்சராக 1995 முதல் 1998 வரையிலான 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்திருந்தார். இந்நிலையில் பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.