தமிழகத்தில் மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது,எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணாநகரில் 150 கி.மீ நடைப்பயணம் நிறைவு பெற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் தா.ராஜா வரவேற்புரையாற்றினார். மாநில செயற்க்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தமிழகத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்புறுத்துவதன் காரணமாக பொதுமக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர், எனவே இதை கைவிட வேண்டும்.
மேலும் மத்திய ஆளும் பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்றுக் கொள்ளாத போதும் தமிழகத்தில் ஆளுநர் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுடைய துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தி மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்த கல்விக் கொள்கை அமல் படுத்த முயற்சிக்கிறார்.
தமிழகத்தில் ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு காலம் தாழ்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதி ஆகி உள்ளது, இதன் காரணமாக சில நாட்களிலேயே ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆன்லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும், மேலும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய விதமாக ஆளுநர் செயல்படுகிறார் என கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், பேச்சிமுத்து, அப்பாதுரை, சன்முகராஜ், சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.