தூத்துக்குடி: தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையை அரசியல் கட்சியாக பதிவு செய்திடவேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். மாநில ஆலோசகர்கள் அருமைராஜன், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பிரசாத் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையின் நிறுவன தலைவர் புலிஇளவரசபாண்டியன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு அமைப்பின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவா எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் நமது அமைப்பானது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்துமக்களுக்கும் உதவும் வகையில் நமது சமூகபணிகளும் தொடர்வது மக்களிடத்தில் நமக்கு நல்லாதரவை தந்துள்ளது. நமது பல்வேறு வகையான மக்களுக்கான சமூகப்பணிகள் எப்போதும் போல தொடர்ந்திடவேண்டும்.
வருங்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு நமது வரலாற்றை முன்னெடுப்பதற்காக இவ்அமைப்பினை அரசியல் கட்சியாக மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமக்காக உருவாக்கப்படும் கட்சியை முறையாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எப்போதும்போல முழுஒத்துழைப்பு அளித்திடவேண்டும் என்றார்.
கூட்டத்தில், வரும் தேர்தலுக்கு முன்பாக அமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்திடவேண்டும், பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்தி அதிக உறுப்பினர்களை சேர்த்திடவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் சதீஷ், மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் வினோத், தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் சந்தனராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் விக்டர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருப்பசாமி செல்வம், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் விக்கி, ஒன்றிய செயலாளர் உதயகுமார், நிர்வாகிகள் மாரி, பிராங்கிளின், முகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தூத்துக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் விக்டர்ஜான் நன்றி கூறினார்.