தூத்துக்குடியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார்.
இப்போட்டிகளில் மாநில முழுவதிலும் 23 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இப்போட்டிகளில் 7, 11, 14 மற்றும் 17 வயது என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற தேசிய அளவிலான போட்டிகளில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கக்கூடிய வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், போட்டிகளின் அமைப்பாளர் ராமலிங்க பாரதி, பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழகத்தில் எல்லா துறையையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்று மக்கள் நலன் தான் முக்கியம் என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கும் முதல்வர் ஸ்டாலின் வழியில் மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உலக நாடுகளில் தமிழக விளையாட்டுத் துறை சிறந்து விளங்கும் வகையில் ஊக்குவித்து வருகிறார். விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்த அரசு உங்களை ஊக்குவிக்கும் அரசாக செயல்படும் என்றார்.