பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம் .! : புதுக்கோட்டையில் பரபரப்பு.! - "தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" - செல்வப் பெருந்தகை எம்எல்ஏ கோரிக்கை.!

 

புதுக்கோட்டைமாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடலில் ஒவ்வாமை பிரச்னைகள் இருந்துள்ளன. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஒவ்வாமைக்கு தண்ணீரில் கலந்த விஷக் கிருமிகள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிய கிராமத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீரில் மனிதக் கழிவுகள் மிதந்து கிடந்து உள்ளன. தகவல் ஊர் முழுவதும் பரவி கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.நீர்தேக்கத்தொட்டி இருக்கும் இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் விசிக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

மேலும் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். சம்பவம் குறித்து விரைவாக விசாரித்து மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவருமான செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகேயுள்ள இறையூர் வேங்கைவாசல் என்ற கிராமத்தில் வசித்து வரும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்கு அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் மேல்தொட்டியில் (டேங்க்) சில சமூகவிரோத மனப்பான்மை கொண்டவர்கள் மலத்தை கலந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழித்தும் இது போன்ற மனோபாவம் கொண்டவர்கள். நாகரீக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவத்தை கேள்விப்படும் போது மிகப்பெரிய பதற்றத்தை உண்டாக்குகிறது. இந்த அநாகரீக செயலால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி. மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில்தான் சங்பரிவார் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.க.வினர். பட்டியல். பழங்குடியின மக்கள் மீது வாயில் மலத்தை திணிப்புத. சீறுநீர் கழிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டுக் கொண்டிருந்தோம். தற்போது உருமாறி வேறுவகையில் தமிழ்நாட்டிற்குள்ளேயும் வந்துள்ளதோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு சே.ரகுபதி அவர்களை தொடர்பு கொண்டு பேசியவுடன். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார்.

பட்டியல் இனத்தவர்கள் மீதான சாதிய வன்கொடுமை தொடர்பாகவுள்ள அனைத்து சட்டப்பிரிவுகளையும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யவேண்டுமெனவும். எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்களை நடக்காமல் இருப்பதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த சமுக விரோத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post