மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிக்கு கூடுதலாக 95 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்க வேண்டும் - அரசுக்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

 

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

ஒன்றிய வட்டார வளர்ச்சி ஊராட்சி உதவி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி இந்த ஊராட்சி செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி இருந்து வரும் நிலையில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அடங்கிய இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அரசுக்கு அவ்வப்போது நமது ஊராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கும் சென்றுள்ளது. மாவட்ட கலெக்டரிடமும், நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடமும் இதுகுறித்து பேசப்பட்டு அவர்களும் நமது மாப்பிள்ளையூரணி பகுதிக்கு தேவைப்படுகின்ற உதவிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகின்றனர். இருந்த போதும், மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் இன்றியமையாத பொருளாக விளங்குகிறது. ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரை குடிப்பதற்கும் மற்ற தேவைக்கு கிணற்று நீர், குளத்து நீரை பயன்படுத்தி அரசுக்கும் ஊராட்சிக்கும் முழுமையாக எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார். 

2022-2023ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குக்கிராமங்களில் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் கூடுதலாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு 95 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வேண்டி கேட்டுக் கொள்வது என ஒருமனதாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், ஸ்டாலின், உமாமகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், சமூக ஆர்வலர் வக்கீல் மாடசாமி, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் பொன்ராஜ், மூர்த்தி, கௌதம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post