நாமக்கல் அருகே, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர்.
மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பட்டாசு கடை உரிமையாளரான தில்லைக்குமார், புத்தாண்டு விற்பனைக்காக சிவகாசியில் இருந்து ஆர்டர் செய்த நாட்டு வெடிகளை, கடையில் இடம் இல்லாததால், வீட்டில் உள்ள ஒரு அறையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில், வீட்டிலிருந்த 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் தில்லைக்குமாரின் வீடு இடிந்து தரைமட்டமானதோடு, அருகிலிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார், மனைவி பிரியா, தாய் செல்வி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியாக்காள் என்ற மூதாட்டி ஆகிய 4 பேர் தூக்கத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி, இடுபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல், கரூர், மோகனூர் தீயணைப்பு வாகனங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா எனவும் சேதம் குறித்தும் வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சேலம் சரக டிஐ.ஜி பிரவீன் குமார் அபிநவ், நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பட்டாசு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.