தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.! - தூத்துக்குடி துறைமுகத்தில்3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

 

இலங்கை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு வலுவிழந்தது. இதைய டுத்து, தென் தமிழகம் மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டு இருந்தது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்க தெற்கே கடந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும். இதனால் தென்தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் பலத்த காற்று வீசக்கூடும் என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில், துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post