தமிழகத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர், தனது அறை மற்றும் உணவுக் கட்டணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு, மடிக்கணினியைத் திருடிச் சென்றதாக திருவனந்தபுரம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் புகார் அளித்ததன் பேரில் கேரள மாநிலம் கொல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ஜான் என்பவர், முன்பணம் எதுவும் கொடுக்காமல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துள்ளார். நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அவர், ஹோட்டல் நிர்வாகத்துடன் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டார். ஓரிரு நாட்கள் தங்கிய அவர், விலையுயர்ந்த மதுபானங்களை விரும்பி குடித்தார். பின்னர் அவர், தான் வர்த்தகரீதியான அவசர மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனது மடிக்கணினி ஹேங் ஆகி விட்டதால் தனக்கு மடிக்கணினி தேவை என்றும் ஹோட்டலில் கோரிக்கை வைத்தார். அவரது தோற்றம், நடை, உடை, பேச்சு ஆகியவற்றை நம்பிய ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு மடிக்கணினியை வழங்கியுள்ளனர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது அறையை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் அறையில் பொருட்கள் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹோட்டல் ஊழியர்கள், இது தொடர்பாக திருவனந்தபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அவரது மொபைல் போன் சிக்னல்களை சோதனை செய்ததில், ஜான் கொல்லம் ரயில் நிலையத்தில் இருப்பதைக் கண்டறிந்து, அவரை கைது செய்த கொல்லம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
2019 ஆம் ஆண்டில், கொல்லத்தில் உள்ள மற்றொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை ஏமாற்றி விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
கிடைத்த தகவல்களின்படி, ஜான் நாடு முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்ததாக 200 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மும்பையில் பதிவாகியுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் தான், பந்தய கும்பல் அதிகமாக செயல்படும் இடங்களாக உள்ளன, அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே இவ்வாறு செய்தேன் என கூறினார்.