நாளை கோவை, திருப்பூர் வழியாக செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் பெரும் திணறல் ஏற்ப்பட்டு உள்ளது. நாளை இரவு செல்லக் கூடிய ரயில்களின் தட்கல் டிக்கெட்டுகள் மற்றும் ப்ரிமியம் தட்கல் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
கோவை, திருப்பூர், சேலம் வழியாக சென்னை, பெங்களூர் செல்லும் ரயில் தடம் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடங்களில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், உள்பட தினசரி 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடம் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும் வழித்தடமாக இருக்கிறது.
இந்த நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி சேலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தெற்கு ரயில்வே, 15 ரயில்களை ரத்து செய்துள்ளது.
இதில் 3 ஆம் தேதி காலையில் கோவையில் இருந்து கிளம்பக் கூடிய கோவை- சென்னை இண்டர்சிட்டி ரயில், மறுமார்க்கத்தில் சென்னை- கோவை இண்டர் சிட்டி ரயில், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - சென்னை செண்ட்ரல் ஜனசதாப்தி ரயில், கோவை - பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 10 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மங்களூரில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக சென்னை செல்லக் கூடிய வெஸ்ட் கோஸ்ட் ரயில் 3 ஆம் தேதி ஈரோடு வரை மட்டும் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து கிளம்பி சேலம், பெங்களூர் வழியாக செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்திற்குள் வராமல் பெங்களூரில் இருந்தே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
சென்னை வழியாக தன்பாத் செல்லும் ரயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு வழியாக மும்பை செல்லும் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. புது டெல்லியில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் செல்லும் கே.கே.எக்ஸ்பிரஸ் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கு சனிக்கிழமை மட்டும் இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரயிலும், செகந்திரபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்கிற சபரிமலை சிறப்பு ரயிலும் 6 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்கிற எக்ஸ்பிரஸ் ரயிலும் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
இவ்வாறு நாளை பகல் நேரத்தில் முழுமையாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை தீபத்திற்கு முந்தையை கடைசி முகூர்த்த தினமாக இருப்பதால் அதிக அளவிலான திருமணம் மற்றும் விஷேஷங்கள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய ரயில் நிலையங்களிலும், இண்டர்நெட் மையங்களீலும் பயணிகள் குவிந்தனர்.
ரயில்வே புக்கிங் வலைத்தளம் திணறிய நிலையில் இன்று இரவு மற்றும், நாளை இரவு இயக்கப்படுகின்ற ரயில்கள் அனைத்திலும் அதிகமான அளவு வெயிட்டிங் லிஸ்ட்டில் புக்கிங் நடைபெற்று உள்ளது.
மேலும் சனிக்கிழமை இரவு கிளம்பக் கூடிய ரயில்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.