தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற வழக்கில் கைதான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி க்யூ பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் அந்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லிட்டில் ஹாம்டன்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என தெரியவந்தது.
மேலும், அவரிடம் எந்தவித ஆவணங்களுக்கும் முறையாக இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் என்றும் அவர் மீது மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது. மேலும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 40 கோடி ரூபாய் மதிப்பிலான கேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்து பொருட்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோனாதன் தோர்னை கைது செய்து சிறையில் அடைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜோனாதன் தோர்ன் பல்வேறு வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு வந்து உள்ளார் என்றும் இங்கிருந்து சில இடைத்தரகர்களை அணுகியதும் தெரியவந்தது. மேலும், அந்த இடைத்தரகர்கள் மூலம் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி படகு மூலம் இலங்கைக்கு அவர் தப்ப முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஜோனாதன் தோர்னை கைது செய்த க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான கியூ பிரிவு போலீசார் இலங்கைக்கு தப்ப முயன்ற ஜோனாதன் தோர்னை தூத்துக்குடி முதலாவது நீதிமன்ற நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி குபேர சுந்தர், உரிய ஆவணம் இன்றி இலங்கைக்கு படகு மூலம் தப்ப முயன்ற வழக்கில் கைதான போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜோனாதன் தோர்னுகு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.