தூத்துக்குடி மாவட்டம் தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற உத்தரவு போன்று போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா பெற்ற 2 குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் I தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டாபாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பாநாயக்கர் மகன் சீனிசெல்வராஜ் (65) மற்றும் இவரது மகன் லட்சுமணகுமார் (29) ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு போன்று போலியாக ஆவணம் தயார் செய்து தட்டாப்பாறை முத்துசாமிபுரம் கிராமத்தில் உள்ள வேறொருவருக்கு உரிமையான 44 சென்ட் நிலத்திற்கு தங்களது பெயரில் பட்டா பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் தட்டாப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து சீனிசெல்வராஜ் மற்றும் லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் புலன் விசாரணை செய்து கடந்த 21.09.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் Iல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேர சுந்தர் இன்று (08.12.2022) குற்றவாளிகளான சீனி செல்வராஜ் மற்றும் லட்சுமணகுமார் ஆகிய 2 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த (தற்போது) கோவை மாநகர வடக்கு காவல் ஆணையாளர் சந்தீஷ் அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கவிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.