திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் உடனமர் உண்ணாமுலையம்மன் திருக்கோவில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மலையே இறைவனாக உருவெடுத்து நிற்கும் திருவண்ணாமலையை வலம் வந்து வணங்குவது பக்தர்கள் வழக்கம். ஆண்டுதோறும் 2668 அடி மலைமீது மஹாதீபம் ஏற்றப்படுகிறது. இதைக்கண்டு தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநில & பிற மாவட்ட பக்தர்கள் என பல லட்சம் பேர் வருகைதருவார்கள்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்புக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கடந்த 39 ஆண்டுகளைத் தொடர்ந்து, 40வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர்காரர்கள் பங்களிப்புடன் லட்சக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை சாரிடபிள் டிரஸ்ட் கோவில்பட்டி சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில், 18 திருமண மண்டபங்களில் வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் திருப்பூர் பத்மாவதிபுரம் திருவண்ணாமலை சேவா டிரஸ்ட் தலைமை செயலாளர் ஆர். சண்முகசுந்தரம் தலைமையில் 600க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலையில் முகாமிட்டு இருபத்தி ஓராயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
காலை தொடங்கிய இந்த அன்னதான நிகழ்ச்சி திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள வன்னியர் திருமண மஹால் மற்றும் பெரிய தெருவில் உள்ள லட்சுமி அரங்கநாதன் மண்டபம் ஆகிய மண்டபங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நள்ளிரவுவரை நடைபெறும்.
கிரிவலம் வரும் பக்தர்களுக்கு மூன்று வேளை வடை பாயசத்துடன் அறுசுவை உணவு, விரதமிருக்கும் பக்தர்களுக்கு கருப்பட்டி தேநீரும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
இதற்காக இந்த குழுவின் செயலாளராக இருக்கும் திருப்பூரைச் சேர்ந்த திரு.சண்முகசுந்தரம் தலைமையிலான நிர்வாகிகள், ஒரு வாரத்திற்கு முன்பே அங்கேயே தங்கியிருந்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இன்றைய அன்னதானத்திற்காக திருப்பூர் மாவட்ட மக்களிடமிருந்து 5 டன் காய்கறிகளும், 30 லட்சம் மதிப்பிலான 11 டன் மளிகைப் பொருட்களும் பெறப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. அலைபாயேசத்துடன் அறுசுவை உணவாக சமைத்து பரிமாறப்பட்ட இந்த பிரம்மாண்ட அன்னதான விருந்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
தொடர்ந்து 40 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதாகவும், வருங்காலங்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்ய டிரஸ் செயலாளர் சண்முகசுந்தரத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் திருப்பூர் திருவண்ணாமலை சேவாடிரஸ்ட் நிர்வாகிகள் வக்கீல் விவேகானந்தன், ஆர்.மோகனசுந்தரம், எல் ஐ சி முருகேசன், என்.சிவக்குமார், ஆலோசகர்கள் சுப்பிரமணியம் - அன்னபூரணி தம்பதியினர், மற்றும் எம். சௌந்தரராஜன், கே. பாலசுப்ரமணியம், ஏ.எம்.ரத்தினசாமி, கே.பொன்னுசாமி, சி.எஸ்.கார்த்திகேயன், ஆர்.மூர்த்தி, நூல் பழனிசாமி, வலையங்காடு சரவணன், தங்கவேலு, கடலை சரவணன், எஸ்.வாசுதேவன், ஏ. மனோகரன், டி.முரளிதரன், ராஜவினாயகம், திருமூர்த்தி, கே.குருசாமி, திருத்தணி முதலியார் சங்கத் தலைவர் கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
சமையல் கலைஞர்கள் ராஜேந்திரன் , எம்.ஆர்.சீனிவாசன் குழுவினர் உணவு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.