ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடை சட்டம் : ஒப்புதல் தராத ஆளுனர் - மக்களின் உயிர், பொருள் மீது துளி கூட அக்கறையில்லாமல் இருப்பதுதான் ஆளுநரின் பணியா? - காங்கிரஸ் MLA செல்வப் பெருந்தகை கேள்வி ?

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நேற்றோடு (27.11.2022) காலாவதி ஆகிவிட்ட நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, அதை நிரந்தர சட்டமாக்கும் மசோதாவை அக்டோபர் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நவம்பர் 24 அன்று. ஆன்லைன் சூதாட்டத்தடை குறித்த ஆளுநரின் விளக்கத்திற்கும் தமிழக அரசு உடனே பதில் அளித்துவிட்டது.

தமிழகத்தில் பல நபர்களின் உயிரையும், பொருளையும் பறித்த ஆன்லைன் சூதாட்டம் அவசரத் தடை சட்டம் காலாவதியாகும் தேதிக்கு 3 நாள் முன்புதான் ஆளுநர் விளக்கம் கேட்கிறார். இந்த உயிர் குடிக்கும் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில் அதை நீர்த்துப் போகச் செய்வது போல் இருக்கிறது ஆளுநரின் செயல்பாடு

உயிர்குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநரின் செயல் வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது துளி கூட அக்கறையில்லாமல் அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருப்பதுதான் ஆளுநரின் அவர்களின் பணியா? தமிழக ஆளுநர் தமக்குரிய முதன்மையான பணியைச் செய்வதில்லை. மேலும் இந்த சூதாட்டத்தில் உயிழந்தவர்களின் ஆன்மா ஒருபோதும் தமிழக ஆளுநர் அவர்களை மன்னிக்காது. இனிமேல் இந்த விளையாட்டால் அநியாயமாக பறிபோகும் உயிர்களுக்கு யார் பொறுப்பேற்பது?

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். இவரின் இச்செயல் மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகும். தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறையில்லாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையா? எனவே. மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் உடனே திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post