வரும் கல்வியாண்டு முதல் எனது தந்தை பெயரில் விருது, ஊக்கத்தொகை வழங்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை போல் முதலமைச்சர் ஸ்டாலின் பல உதவிகளை சமூகநலத்துறை மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துறையின் அமைச்சராக கீதாஜீவன் பணியாற்றி வருகிறார். நல்லமுறையில் அனைவரும் படிக்க வேண்டும். அதற்கு அரசும் முதலமைச்சரும் உதவி செய்வார்கள். எல்லோரிடமும் ஒவ்வொரு திறமைகள் உண்டு அதுபோல் உங்களிடமும் உண்டு. சில குறைபாடுகள் தெரிவிப்பதற்கு 1098 எண் உள்ளது.
மக்கள் பணி ஆற்றுவதற்கு என்று நாங்களும் இருக்கிறோம். உங்களுக்கு தேவையான சேவைகளை செய்து கொடுப்போம். இந்த இல்லங்களில் உள்ள குழந்தைகள் அரசு தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நினைவு பரிசும் ஊக்கத் தொகையும் மறைந்த எனது தந்தை பெரியசாமி பெயரில் வழங்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் நினைவு பரிசும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். திறமையை வளர்த்து கொண்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
விழாவில் குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் வக்கீல் அரசகுமார், பிரகாஷ், சித்திரம்ஜான், டார்லிங் பக்கிள், தங்கம், பியூலா, இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர் டயானா, நன்னடத்தை அலுவலர் முருகன், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ் மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச்செயலாளர் டென்சிங், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ராபர்ட், ஜோஸ்பர் உள்பட இல்லங்களின் காப்பளார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி நன்றியுரையாற்றினார்.