நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருப்பூரில் ரூ.38.81 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம், ரூ.19.7 கோடி மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ.12.86 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட வார சந்தை, ரூ.4.69 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட மலர் சந்தை என மொத்தம் ரூ. 75.43 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா சென்னையில் நடந்தது. காணொலி காட்சி மூலம் முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி மற்றும்
தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் டி. உதயசூரியன், குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏக்கலுமான அர்ஜுனன், சின்னப்பா, தேவராஜ், ஏ. மகாராஜன், ஜெயராமன் ஐயர் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி உதவி அளித்து வரும், பியோ தலைவர் சக்திவேல், நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி உள்ளிட்டவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
திருப்பூர் பஸ் நிலையம் பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் பாலூட்டும் அறை, தானியங்கி படிகட்டு, மற்றும் திருப்பூர் பனியன் தொழிலை பறைசாற்றும் விதமாக ஓவியங்கள், சோலார் மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், 8 கழிவறை வசதி என பல வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், வாரசந்தை, மலர் சந்தை போன்றவையும், பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.முன்னதாக திறப்பு விழாவை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் போன்றவை மின் விளக்குகளால் அலங்கரி்க்கப்பட்டிருந்தன. இந்த பஸ் ஸ்டாண்டில் இன்று பொதுமக்கள் திரண்டு பார்வையிட்டனர். கல்லூரி
மாணவ மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்---