நங்கநல்லூா் 6 வது மெயின் ரோட்டில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில்,செங்கல் லாரி சிக்கியது.மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டா் அதிகாரிகள் பொக்லைன் மூலம் செங்கல் லாரியை மீட்டனா்.
சென்னை நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது சாலைகளின் நடுவில், திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவது, தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை நங்கநல்லூர் ஆறாவது மெயின் ரோட்டில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் ஏற்பட்டு சில நிமிடங்களில் யாரும் கவனிப்பதற்கு முன்னதாகவே, ஒரு செங்கல் லாரி,ஒரு செங்கல் லாரி வேகமாக அந்த சாலையில் சென்றது. அந்த லாரியின் பின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனை அடுத்து லாரி டிரைவர் அவசரமாக லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.
அப்பகுதி மக்கள் வந்து லாரியை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மெட்ரோ வாட்டர் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் பழவந்தாங்கல் போலீசாா் ஆகியோர் விரைந்து வந்தனர். அதன்பின்பு, பொக்லையின் இயந்திரம் கொண்டு வந்து பள்ளத்தில் சிக்கிக்கொண்ட செங்கல் லாரியை சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி,பள்ளத்திலிருந்து வெளியே தூக்கி மீட்டு அனுப்பினார்கள்.அதன்பின்பு அந்த திடீா் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகளை அமைத்து,போக்குவரத்தை தடை செய்தனா்.
இதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் அந்த பள்ளத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் தெரிவிக்கையில், இந்த சாலையின் அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாய், அழுத்தம் ஏற்பட்டு உடைந்து உள்ளது. அதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால், மணல் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து இருக்கிறது. அதை கவனிக்காமல் அதே பள்ளம் வழியாக லாரி வேகமாக வந்ததால், அந்த லாரியில் செங்கலும் ஏற்றப்பட்டு இருந்ததால், அந்த லேசான பள்ளத்தை லாரி கடக்கும் போது பெரும் பள்ளம் ஏற்பட்டு, லாரி டயர்கள் உள்ளே சிக்கிக் கொண்டது. இதை அடுத்து அந்த பாதாள சாக்கடை குழாயை,சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதுவரையில் இந்த சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்து மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்கள்.