கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பல கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கி குவித்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சிதலைவரும், பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....
"தமிழ்நாட்டின் எதிர்கட்சித்தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தமிழக ஆளுநரை சந்தித்த பின், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தங்களது ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன என்று ஊடகத்தில் செய்தி பார்த்தேன். ஒரு மனிதரால் இப்படியெல்லாம் உண்மைக்கு புறம்பாக, திரித்து பேசமுடியுமா என்று வியந்து போனேன்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளையும், சென்ற ஆட்சியில் ஆள்பவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் ஆராய்வது குழுவினரின் கடமையாகும். அந்த வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பல கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கி குவித்து வைத்துள்ளார்கள். பொதுக்கணக்குக்குழுவினர் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததை விளக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது
கடந்த ஆண்டு (22.10.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த போது ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் (2013-14) காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு 30.03.2022 மதுரையில் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது ரூ 16 கோடியில் 2018-19 காலகட்டத்தில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, அதனால் அந்த மருந்துகள் காலாவதியானது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போன்று 29.06.2022 அன்று நெல்லை மாவட்டத்தில் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது கடந்த ஆட்சியில் 2017-18 காலகட்டத்தில் நார்வே நாட்டிலிருந்து டெங்கு, மலேரியாவை கண்டுபிடிக்க ரூபாய் 4.29 கோடி செலவில் மருத்துவ கருவி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படாமல் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், 27.08.2022 திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் மருந்துப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், பாபநாசம். கன்னியாகுமரி உள்பட இதுவரை பொதுக்கணக்குக்குழுவினர் ஆய்வு செய்த இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் கலாவதி தேதிகள் குறிப்பிடாத சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைக்கப்பட்டுள்ளது என்றும் யார் குழுவினர் காரணம் என்பது குறித்து கண்டறிய குழு தெரிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி அளித்தோம்.
திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போதுள்ள அரசை குற்றம் சொல்வதற்கு தாங்கள் தகுதியானவர்கள் தானா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மருத்துவமும், கல்வியும் இரு கண்களாக கருதும் தற்போதுள்ள அரசின் மீது குற்றம் சாட்டுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அரசியல் செய்வதற்கு தாங்கள் செய்த தவற்றை மறைத்து. மற்றவர்கள் மேல் பழி போடுவது அநாகரீகமாக இருக்கிறது. பொதுக்கணக்குக்குழுவில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த உண்மை புரியும். எடப்பாடி பழனிசாமியின் இரட்டை நாக்கை தமிழ்நாட்டு மக்களும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.