''தூத்துக்குடியின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும்" மாணவர்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேச்சு.!

அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான் மற்றும் கணினி வழங்கும் விழா கல்வி உதவித் தொகை அறிமுக விழா சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்புரையாற்றினார். 

14 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான் மற்றும் கணினிகள் வழங்கி கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி கனிமொழி எம்.பி. பேசுகையில்: இந்த காலத்தில் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடையாது. அதிலும் பெண்களுக்கு படிப்பே தேவையில்லை என்றார்கள். சிலருக்கு படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பலருக்கு உரிமையே கிடையாது, என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காக பெரியார் போராட்டத்தை துவங்கினார். ஆண், பெண், ஜாதி, மதம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். அதன் வழியில் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் செயல்பட்டு கல்வியில் ஜாதி, மதம் பாராமல் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கிறது. பெண்கள் 12 படித்தால் போதும், அதற்கு மேல் கல்வியில் படிக்க வைக்க பணம் இல்லை, என்ற நிலையை போக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.1000 மாதம் தோறும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றித் தர வேண்டும். இங்கு விளையாட்டு மைதானம் என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயம் செய்து கொடுக்கப்படும். படிப்பில் ஆர்வத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் பல தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாதவற்றை அதில் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, மதம் பார்க்காமல் எல்லோரும் பழக வேண்டும். மனித நேயத்தோடு புரிந்து கொண்டு பணியாற்றினால் சச்சரவுகள் எதுவும் வராது. அதன்மூலம் எல்லாரும் நன்மைகள் அடையலாம். 

ஜே.எஸ்.டபிள்யூ பவுன்டேசன் நிறுவனம் உயர்கல்வி படிப்பதற்கு பல்வேறு உதவிகளை செய்கின்றன. 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 80 சதவீதம் உதவித்தொகையும், 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தூத்துக்குடி பெருமையை உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். 

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: எம்.பி. அவர்களின் முயற்சியால் இந்த நல்ல பணிகள் இங்கு நடைபெறுகின்றன. தொகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அவர்களது முயற்சியில் இது மட்டுமின்றி, பாரத பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உதவி செய்துள்ளார்கள். 2006ல் நான் அமைச்சராக இருந்த கட்டத்தில் இருந்து இந்த பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்வது மட்டுமின்றி முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். பலர் என்னிடம் வரும்போது, இந்த பள்ளியில் படித்தால் அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று கூறி வருகிறேன். மாணவ, மாணவிகளின் தரத்தை உயர்த்தை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இல்லம் தேடி கல்வி மூலம் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். 35 சதவீதம் தேர்ச்சி பெற்றால் வெற்றி என்பதையும் கடந்து படிப்பறிவோடு பொதுஅறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர் கல்விக்கு செல்வதற்கு 7.5 சதவீது இடஒதுக்கீடு உங்களுக்கு கைகொடுக்கும். நல்லமுறையில் அனைவரும் படிக்க வேண்டும் என்று பேசினார். 

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: அரசு பள்ளிகள் 10 ஆண்டுகளாக பின்நோக்கி இருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளன. அதற்கு காரணம் அரசின் மீது நம்பிக்கை தரமான நல்ல கல்விகள் வழங்கப்படுவது தான் காரணம். கலைஞர் ஆட்சியில் முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 21 பள்ளிகளில் பயிலும் 750 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளின் அடிப்படை பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது என்றார். 

விழாவில்  ஜே.எஸ்.டபிள்யூ பவுன்டேசனை சேர்ந்த தென்னவன், பாரதி பழனிசாமி, சுப்பிரமணிய பிள்ளை, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள்: அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர்,  பகுதி செயலாளர்கள்: ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கபிரியேல்ராஜ், மாநகர மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் பால்ராஜ், பகுதி துணை செயலாளர் ரேவதி, கவுன்சிலர்கள்: சரவணக்குமார், விஜயகுமார், வைதேகி, ஜெயசீலி, கந்தசாமி, ஜான்சிராணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட செயலாளர்கள்: சுப்பையா, சுரேஷ், மூக்கையா, கங்காராஜேஷ், பொன்ராஜ், பாலு, முன்னாள் கவுன்சிலர்கள்: செந்தில்குமார், ஜெயசிங், பாலசுப்பிரமணியன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள்: ரவி, சூர்யா மற்றும் மணி, பிரபாகர், அல்பர்ட், மகேஸ்வரன்சிங் உட்பட மாணவ, மாணவியர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) தமிழ்செல்வி நன்றியுரையாற்றினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post