மாற்றுத்திறனுடைய சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தினவிழா கொண்டாடிய தூத்துக்குடி ஆட்சியர்!

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இளம்சிறார்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ரோஜா பூக்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்காக கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின் சைல்டு லைன் மூலம் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ராக்கி கயிற்றினை கட்டினர். 

இந்நிகழ்ச்சிகளுக்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 54 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். தூத்துக்குடி மாநகரில் உள்ள வ.உ.சி. துறைமுகம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள், பூங்காக்கள், நினைவகங்கள் ஆகியவற்றிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சைல்டு லைன் மூலமாக பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சைல்டு லைன் மூலமாக தொடர்ந்து அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி புனித மேரீஸ் பள்ளியில் நாளை காவல் துறை மற்றும் சைல்டு லைன் மூலமாக குழந்தைகளுக்கு கபடி போட்டி நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பல்வேறு விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக யங் இந்தியன்ஸ் அமைப்பின் மூலமாக விழிப்புணர்வு மாராத்தான் நடைபெறவுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சார் ஆட்சியர் கௌரவ் குமார் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வீரபுத்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post