தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து வகை உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் 15 சதவீத உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகர்கள் உரிமம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து "உணவு பாதுகாப்பு உரிமம் மேளா" நடத்த உணவு பாதுகாப்புத் துறையால் தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க அலுவலக அரங்கில் சிறப்பு மேளா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன், அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு, முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.