சேர்ந்தமரம் பகுதியில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேந்தமரம் காவல் நிலைய எல்லைக்குள் மட்டுமே 4 மதுக்கடைகள் உள்ளன. 5வதாக அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருணாசலபுரம் கிராமம் அருகில் மதுக்கடை திறக்கும் முயற்சி நடந்து வருகிறது.
ஊராட்சி மன்ற தலைவரின் போலி கையொப்பம் மூலம் கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது மதுக்கடை மூடப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மூலம் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.போலீசார் அவ்வப்போது கஞ்சாவை பறிமுதல் செய்து அதிகளவிலும் அடிக்கடியும் கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குள் மட்டுமே அதிகமான மது கடைகள் உள்ளதால் சேர்ந்தமரத்திற்கு வரும் பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குடிமகன்கள் ஆடை இல்லாமல் படுத்து கிடப்பதும் பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தகாத வார்த்தைகளால் பேசிவருவதால் பள்ளி செல்லும் மாணவிகள், மற்றும் மருத்துவமனைக்கு வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
போதையில் இளைஞர்கள் ரகளையில் அதிகமாக ஈடுபடுவதால் சேந்தமரம் காவல் நிலையத்தில் இதுகுறித்த வழக்குகளும் பதிவாகி வருகிறது.
குறிப்பாக சேர்ந்தமரம் மெயின் ரோட்டில் திருமலாபுரம் செல்லும் விலக்கு அருகில் உள்ள மது கடையில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனத்தை ரோட்டில் நிறுத்துவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயபால் கூறும் போது வருங்கால இளைஞர்களின் நலன் கருதி மதுகடைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்