முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு : ஆட்சியர் தகவல்.!

 

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால், தகுதி உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, கவர்னர் தலைமையில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 1ம் முதல் 5ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 800 லிருந்து 4,000, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு பயில்பவர்களுக்கு 1,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும், 11 மற்றும் 12ம் வகுப்பு பயில்பவர்களுக்கு 1,500லிருந்து 6000 ரூபாயாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

தகுதியும் விருப்பமும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் exwel.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து,  பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கு நேரில் வர அறிவுறுத்தப்படுகிறது.  விண்ணப்பம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post