மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ரயில்வே வாரியத்தின் முதன்மை செயல் இயக்குநராகவும், செயலாளராகவும் வெற்றிகரமாக ஆர்.என்.சிங் பொறுப்பேற்ற பிறகு, தெற்கு ரயில்வேயின் புதிய பொது மேலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகிறேன்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தின் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்கவும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் அதிக ரயில் சேவைகளை இயக்க பொதுமக்கள் மற்றும் ரயில் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
தற்போது, திருச்செந்தூர் 3 நடைமேடைகளைக் கொண்டுள்ளது. நடைமேடை எண் 1ல் 18 பெட்டிகளும் மற்ற 2 நடைமேடைகளில் 12 ரயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, 24 பெட்டி ரயில்கள் நிறுத்தம் வகையில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக இரண்டு நடைமேடைகளையும் அமைக்க வேண்டும்.
50 லட்சம் மக்கள் திருச்செந்தூருக்கு முருகன் கோவில் திருவிழா காலங்களில் கூடும் காரணத்தால் கூடுதல் ரயில் சேவையை இயக்க வேண்டும். எனவே, பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகப்படுத்துதல், கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைத்தல், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்;, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.