தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் பி.அமுதா, தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் இன்று (01.11.2022) நடைபெற்றது.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் பி.அமுதா, தெரிவித்ததாவது:
"கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய 4 முறை நடத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுக்கு அதிகமான அதிகாரம் தர வேண்டும் என்பதற்காகவும், மக்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களை நிறைவேற்றவும் கூடுதலாக நவம்பர் 1 (உள்ளாட்சி தினம்), மார்ச் 22 ஆகிய 2 நாட்கள் என மொத்தம் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள், மக்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிப்பதற்கும், வரவு செலவு பற்றி அறிந்து கொள்வதற்கும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
எச்.சி.எல் நிறுவனர் திரு.ஷிவ் நாடார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். எச்.சி.எல். நிறுவனம் உலக அளவிலான கம்ப்யூட்டர் தொடர்பான நிறுவனம். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நிறுவி சமுதாய பணிகள் ஆற்றி வருகிறார். தனது சொந்த மாவட்டத்தில் ஏதாவது சமுதாய பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக எச்.சி.எல் நிறுவனர் திரு.சிவநாடார் அவர்களின் குடும்பத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, விளாத்திகுளம் மற்றும் வி.புதூர் ஒன்றியங்களில் கல்வி, சுகாதாரம், குடிநீர், பொருளாதாரம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான பணிகளை அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,575 ஊராட்சிகளிலும் அரசினால் அனைத்து சமுதாயப்பணிகளையும் செய்ய முடியாது. அத்தகைய பணிகளை தனியார் நிறுவனங்களின் மூலம் செய்யப்படுகிறது. இங்கு நடைபெறவுள்ள வளர்ச்சி பணிகள் வெற்றிகரமாக அமைந்தால் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000/- கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது. கிராம சபை கூட்டங்களில் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி தேவைப்பட்டால் அரசிடம் கேட்டுப்பெற வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியினைப் சிறந்த முறையில் பயன்படுத்தி ஊராட்சிகளை மேம்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் பி.அமுதா, தெரிவித்தார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்து அன்றைய தினம் கிராம சபை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்வமரத்துப்பட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி துறை செயலர் அவர்களே பங்கேற்றிருப்பது அரசே நேரடியாக உங்களை சந்தித்தது போல் ஆகும். நமது கிராமத்திற்கு தேவையான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய தினம் நமது மாவட்டத்தில் பிறந்து உலகம் போற்றுகின்ற தொழிலதிபராக இருக்கின்ற எச்.சி.எல். குடும்பத்தினர் நம்முடைய குளங்கள், நீர்நிலைகள், விவசாயம், கிராம பொருளாதாரம் மற்றும் பெண்கள் மேம்பாடு என பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்காக துறை செயலர் அவர்களுடன் அனுப்பி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 388 ஊராட்சி ஒன்றியங்களில் புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கிருக்கின்ற 128 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கிறார்கள். மேலும் பொருளாதா முன்னேற்றத்திற்காக தையல் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மகளிர் உதவிக்குழு பெண்கள் சுய ஒவ்வொரும் தங்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்கி லட்சக்கணக்கில் கடன் பெற்று சுயதொழில் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் 139 ஊராட்சிகள் இருக்கின்றது. விளாத்திகுளம் தாலுகாவில் 92 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. எல்லா கிராமங்களிலும் பாசன குளங்கள் இருக்கிறது. ஆனால் 350, 400, 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளங்கள் நூற்றாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இப்பகுதிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அந்த குளங்களை 2 மீட்டர் தூர்வாருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏனென்றால் வில்வமரத்துப்பட்டியில் உள்ள 380 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தினை சுமார் 10 அடி ஆழத்திற்கு தூர்வாரினால் ஒரு நீர்த்தேக்கம்போல் மாறி தண்ணீரின் உப்புத்தன்மை நீங்கி அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்கும். தாமிரபரணி தண்ணீரினை செலவு செய்து கொண்டு வர வேண்டியதில்லை.
இங்குள்ள குளங்களை தூர்வாரினாலே இங்கேயே குடிநீருக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதை துறை செயலர் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பாக கோரிக்கையாக வைக்கிறேன் என விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் பி.அமுதா, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலையில் கே.தங்கம்மாள்புரம் ஊராட்சியில் குடிநீர் கண்மாயின் நீர் கொள்ளளவினை அதிகரித்தல் மற்றும் கரையில் சிமெண்ட் கலவையுடன் கூடிய கற்கள் பதிக்கும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார்கள்.
அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் எச்.சி.எல். சமுதாய திட்ட செயலாக்கம் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு.ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மரு.சிவசங்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இல.சரஸ்வதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் என்.ஸ்ரீராம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், விளாத்திகுளம் வட்டாட்சியர் சசிகுமார், உதவி திட்ட அலுவலர்கள் லீமாரோஸ், நாகராஜன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் எஸ்.நடராஜன், மிக்கேல் நவமணி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இரா.முனியசக்தி ராமசந்திரன், துணைத்தலைவர் த.சுப்புலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், எச்.சி.எல். பவுண்டேஷன் வைபவ் சௌகான், ஊராட்சி மன்ற தலைவர்கள் இ.சின்னபொன்னு (வில்வமரத்துப்பட்டி) புஷ்பவல்லி (கே.தங்கம்மாள்புரம்) மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.