கூட்டுறவு வாரவிழாவில் கடனுதவிகள்: கனிமொழி எம்பி வழங்கினார்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்று மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூட்டுறவு வார விழாவில் பேசினார். 

தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தெரிவித்ததாவது:

தூத்துக்குடியில் இன்று 69வது கூட்டுறவு வார விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கு உதவிகரமாக கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நமது வாழ்க்கையில் விவசாய கடன்கள், தொழிற்;கடன்கள் பெறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் இன்றியமையாத அங்கத்தை வகித்து வருகிறது. இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதை அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு நாம் மறுபடியும் முயற்சி மேற்;கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 4200 டன் உரங்கள் தேவைப்படுகிறது. 

அதில் பாதிக்கு மேல் கூட்டுறவு சங்கங்களின் வழியாகத்தான் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது பெருமையாகும். மேலும் நமது மாவட்டத்தில் 5.50 இலட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 4.70 இலட்சம் குடும்ப அட்டையினர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பயன்பெற்று வருகிறார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடை மூலமாகத்தான் சென்றடைந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய பொங்கள் பண்டிகை பொருட்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள் வழியாகத்தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் தந்து கொண்டிருக்கின்றன. பெரியசாமி முயற்சியினால், கலைஞர் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். இன்று கிட்டத்தட்ட 2,309 பயனாளிகளுக்கு ரூ.17.63 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம். கூட்டுறவு சங்கங்கள் வழியாக பல்வேறு நன்மைகளை பெற்று வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: கூட்டுறவு சங்கங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றிருந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டு அரசு மானியங்கள் வழங்கி வருகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 964 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, புதிய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு பயனடைந்து வருகிறார்கள். கடன்களை முறையாக திருப்பி செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் 40 கிராமிற்கு குறைவாக உள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்கள். அதன்படி தமிழக அரசினால் ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.160 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 57,162 பேர் பயனடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவுத்துறை மூலம் நமது மாவட்டத்தில் உள்ள 2,903 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரூ.93 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் எளிமையான முறையில் எளிதில் அணுகக்கூடிய வகையில் இயங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் ரூ.500 டெபாசிட் செய்து கணக்கு தொடங்கி அரசின் பல்வேறு திட்டங்களை பெற்று பயனடைய முடியும். ஏழை மக்கள் பெரிய வங்கிகளை எளிதில் அணுக முடிவதில்லை. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் வங்கிகள் படிப்பறிவு இல்லாத மக்களும் எளிதாக அணுகும் வகையில் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் பெ.கீதா ஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, ஆவின் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக் குமாரசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் ச.லீ.சிவகாமி, துணைப்பதிவாளர் சுப்புராஜ், மாநகராட்சி உறுப்பினர் சரண்யா மற்றும் கூட்டுறவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post