வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இன்றும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஏதுவாக தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 4 நாட்கள் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
அந்தவகையில் நேற்று (நவம்பர் 12), Dன்று (நவம்பர் 13) மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் புது வாக்காளராக சேர்க்கப்படுவார்கள். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 2023 ஜன., 1ம் தேதி அன்று 18 வயது நிறைவு அடைவோர் படிவம் 6; பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7, சட்டசபை தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்தோர், மற்றொரு சட்டசபை தொகுதியில் குடிபெயர்ந்தவர்கள் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் வழங்கலாம்.
நவ., 13, 26, 27 ஆகிய நாட்களில் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, இன்று நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.