"தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும்" என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலை, கால்வாய், குடிநீர், ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதிகளில் உள்ள புதிய பணிகளை மேற்கொண்டு செய்து கொடுத்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்களின் நலன் கருதியே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்..
கூட்டத்தில் டூவிபுரம் மேற்கு என்று இருந்த பகுதியை அண்ணாநகர் என்று பெயர் மாற்றம் செய்வது உட்பட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகள் அனைத்திற்கும் மேயர் ஜெகன் பெரியசாமி பதில் அளித்தார்.