தண்ணீர் கேன்களில் உயர்ரக போதை பவுடரை நிரப்பி இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இந்த போதை பவுடர் ரூ.300 கோடி மதிப்புடையது என போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் இரு தினங்களுக்கு முன் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்கள் இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதித்தனர். அது போதை பவுடர் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கடத்தப்பட்ட போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி தி.மு.க.,கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், 45, தற்போதைய, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், 42, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை, இலங்கைக்கு கடத்த முயன்று போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை...
இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளனர். இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகிறோம். இவர்கள் ஏற்கனவே இதுபோன்று போதை பொருளை இலங்கைக்கு கடத்தி இருக்கிறார்களா? இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும். இந்த கடத்தலில் வேதாளையை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.