தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் நேற்று முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து பேசிய கனிமொழி எம்பி " புத்தகங்களை தேடித்தேடி சிந்தனையை செதுக்கியவர்கள்தான் சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள்" என பேசினார்.
தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி புத்தகத் திருவிழா இன்று முதல் 30.11.2022 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று உங்கள்மீதுள்ள நம்பிக்கையோடு நடத்தப்படுகிறது. உலகில் உள்ள விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான்.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டது. எழுத்தாளர்கள் எழுதுவதற்கு தடை செய்யப்பட்டார்கள். சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள். இன்றும் எழுத்தாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தினை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் பராசக்தி திரைப்படத்தில் சமூகத்தில் எதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று வைத்திருந்தார்களோ அதையெல்லாம் எழுதியுள்ளார்கள். எதைப்பற்றி பேசக்கூடாது என்று இருந்ததோ அதையெல்லாம் கேட்கக்கூடிய தைரியம் அந்த எழுத்தில் இருந்தது. புத்தகங்களை தேடித்தேடி தனது சிந்தனையை செதுக்கிக்கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள். எது நமது அடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக்கூடியது புத்தகங்கள்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற கரிசல் இலக்கியம்தான் இன்றைக்கு நாம் கொண்டாடக்கூடிய நாட்டார் கதைகளாக மாறியிருக்கின்றன. கிராமிய கலைகளை கொண்டாடக்கூடிய நிலையை அந்த எழுத்துக்கள் உருவாக்கியிருக்கின்றன. நீங்கள் அனைவரும் படிப்பதற்காக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகத்தின் முக்கியத்துவத்தை வருங்கால தலைவர்களாகிய இளைஞர்கள் அறிய வேண்டும், புத்தக பதிப்பாளர்களுக்கு இலாபம் கிடைக்க வேண்டும், புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் இன்று புத்தக திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
மேலும் ஜனவரி மாதத்தில் உலக அளவிலான புத்தக திருவிழா நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்கள். தமிழர்கள் நல்ல அறிவாற்றல் பெற்ற சமுதாயமாக இருக்க வேண்டும், தங்களை நல்ல சிந்தனையாளர்காளக மாற்ற வேண்டும், புத்தக வாசிப்பை ஊக்கவிக்க வேண்டும் என்பதற்காக புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவாற்றலை பெருக்கிக்கொள்ள முடியும். நம்முடைய சிந்தனைத்திறன் அதிகரிக்கும். உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும். உங்களுக்கு பிடித்த புத்தகங்களை நீங்களே தேர்வு செய்து படிக்க வேண்டும். புத்தக திருவிழா மூலம் மாணவ, மாணவிகள், வாசகர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.