தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணியாற்ற ஊர் காவல்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 22 மீனவ இளைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய மீனவ இளைஞர்கள் 22 பேர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் கடந்த 12.09.2022 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (15.11.2022) நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியானது அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 45 நாட்கள் கவாத்து உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பயிற்சி பெற்ற மேற்படி 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
பயிற்சி நிறைவு நாளான இன்று மேற்படி ஊர்காவல்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், மாவட்ட காவல்துறை கூட்ட அரங்கில் வைத்து சிறப்புரையாற்றுகையில், நீங்கள் அனைவரும் 45 நாட்களில் இவ்வாறு சிறந்த முறையில் கவாத்து பயிற்சி பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது, குறுகிய காலத்தில் நீங்கள் நல்லமுறையில் பயிற்சி பெற்றிருப்பது ஊர்க்காவல் படையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. சீருடையணிந்து சமுதாயத்திற்கு நன்மைகள் செய்வதற்கு உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் நடராஜன், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார துணை தளவாய் கௌசல்யா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.