மருத்துவர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! - மருத்துவர்கள் சஸ்பெண்ட், 10 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, - அரசு அறிவிப்பு.!

 

வலது கால் சவ்வு பிரச்னை காரணமாக, பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம்...கூறுகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வீராங்கனை பிரியா, இன்று காலை உயிரிழந்தார். காலை 7.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “ரத்த ஓட்டம் பாதித்ததால், வீராங்கனை பிரியாவின் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த பத்தாம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று முன்தினம் நேரடியாக வந்து அவரை பார்த்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர் மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை இருந்த போதும் இன்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க செய்தோம். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரு மருத்துவர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மாணவி பிரியா முதலில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும்துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் என்றும் மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post