மழையால் வியாபாரம் போச்... திருப்பூர் கடைக்காரர்கள் பாவம்!

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மழை காரணமாக ஞாயிறு தின வியாபாரம் முடங்கி கடை வீதிகள் வெறிச்சோடியது. 

திருப்பூர் மாநகரம் பனியன் தொழில் நகரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் வசிக்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்கள் கடைவீதிகளில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் வீதி, பி.என்., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து உள்ளார்கள். 

இந்த சூழ்நிலையில், காலை 11 மணியளவில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் தொடங்கியது. அதற்குள்ளாகவே 12 மணியளவில் மாநகரில் பல இடங்களில் மழை பெய்தது.இதனால் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அவசரமாக கிளம்பி வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் மழை காரணமாக கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லவும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையில் பரபரப்பாக இருக்க வேண்டிய திருப்பூர் மாநகர கடைவீதிகளில் சுமாரான கூட்டமே காணப்பட்டது. 

Previous Post Next Post