விளையாட்டாக மரணத்தில் முடிந்த சிறுமியின் காதல்... பாறைக்குழியில் விழுந்து பலியான பரிதாபம்

9ம் வகுப்பு மாணவி கைவிடப்பட்ட கல்குவாரி பாறைக்குழியில் தேங்கியுள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து இரு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

 திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) பனியன் நிறுவன தொழிலாளியான இவர், தனது மனைவி வினிதா (பெயர் மாற்றம்)  மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.  மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.  இளையமகள் சாவித்திரி (14) (பெயர் மாற்றம்)  அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 

 தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் பொழுது, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலர்களாக வலம் வந்துள்ளனர்.  இந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, கடந்த சில தினங்கள் முன்பு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை சதீஷ் குமார் புகார் அளித்துள்ளார்.  

போலீசார் சிறுவன், சிறுமி மற்றும் இருதரப்பினரையும் அழைத்து பேசி அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.  இதையடுத்து சிறுவன் 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  சிறுமி சாவித்திரியை திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

 மேலும், சிறுமி பள்ளிக்கு செல்ல ராயபுரம் பகுதியில் உள்ள மகளிர் காப்பகத்தில் கடந்த 11-ம் தேதி  சேர்த்துள்ளார்.  தொடர்ந்து 12-ம் தேதி காலை தன் மகளை காப்பகத்தில் பார்த்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் மாலை பள்ளிக்கு மகளை பார்க்க சதீஷ்குமார் வந்தார். அப்போது, சாவித்திரிஅன்று காலையே பள்ளிக்கு வரவில்லை என தகவல் தெரியவந்தது.  

இதையடுத்து பல பக்கம் தேடியும் விசாரித்தும் தகவல் தெரியாததால், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ரமேஷ்குமார் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து, போலீசார் சாவித்திரி  காதலித்து வந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியுடன் இரு சிறுவர்கள் ஒரு சிறுமி என நான்கு பேரும் அம்மாபாளையத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரி பாறைக்குழி பகுதிக்கு சென்றது தெரியவந்தது. 

மேலும் அவர்கள்  நான்கு பேரும் விளையாட்டாக பேசிக்கொண்டு, பாறைக்குழியில் இரு ஜோடிகளும் கை கோர்த்தபடி தண்ணீரில் குதிக்கலாம் என பேசிக்கொண்டிருந்துள்ளனர்.  அப்போது சாவித்திரி மட்டும் திடீரென தண்ணீரில் குதித்துவிட்டதாகவும், இதனால், பயத்தில் மூவரும் சென்று விட்டதாகவும் கூறியுள்ளான்.  

இதையடுத்து போலீசார் சென்று பார்த்த போது பாறைக்குழியில் சாவித்திரி சடலமாக கிடப்பது தெரியவந்தது.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு வீரர்கள் சிறுமியின் உடலை மீட்டனர்.  சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும், சம்பந்தப்பட்ட இரு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் காதல் விளையாட்டில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Previous Post Next Post