தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கிய வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று(28.10.2022) தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரத்தை சார்ந்தவர் பாப்பா (64). இவரை கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த விமல்காந்த், உதவி ஆய்வாளராக இருந்த காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினராம். இது சம்பந்தமாக தூத்துக்குடி பி.சி.ஆர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவரால் தனிநபர் வழக்கு தொடரப்பட்டது.
இதில், விமல்காந்த் தற்போது ஏடிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். காந்திமதி தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக உள்ளார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் மூலம் தனிநபர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட விமல்காந்த், காந்திமதி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.26ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதில், ரூ.50 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் பூங்குமார் வாதாடினார்.
பி.சி.ஆர் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.