தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி ராஜா (27) என்பவருக்கும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மனைவி ஷோபனா (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில் ஷோபனா மாகாளி ராஜாவிடம் வாங்கிய பணத்தை நேற்று (04.09.2022) திருப்பி தருவதாக கூறியிருந்திருக்கிறார், ஆனால் அதன்படி அவரால் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை.
அதனால் ஆத்திரமடைந்த மாகாளி ராஜா, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து விட்டிலிருந்த டி.வி, பிரிடஜ் ஆகியவற்றை சேதப்படுத்தி ஷோபனாவையும், அவரது மகளையும் கையால் அடித்து, அவதூறான வார்த்தைகளில் பேசி கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஷோபனா ஆத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குற்ற செயலில் ஈடுபட்டவர் ஆயுதப்படை காவலராக இருந்தபோதிலும்
எவ்வித பாரபட்சமும் இல்லாமல் மேற்படி ஆயுதப்படை காவலரை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்குமாறு திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில்
உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் மேற்படி ஆயுதப்படை காவலர் மாகாளி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனர்.
குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.