உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தும் வகையிலான உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நேற்று (28.09.2022) மாலை 3.30 மணியளவில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி உயர் நிலைப்பள்ளியின் நானி பல்கிவாலா கலையரங்கத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்புரை ஆற்றினார். கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் அனைவரும் சேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தி உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை புரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து உலக சாதனை அமைப்பின் அலுவலக பதிவுகள் மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் உலக சாதனை சான்றிதழை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமியிடம் வழங்கினார்.
இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர்.ராஜ்பால் கே.அபய்சந்த் தலைமையில், ஆரோக்கியமான இதயத்திற்கான உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர். கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர்.பி.சந்திரசேகர் நன்றியுரை ஆற்றினார்.