தூத்துக்குடி வ. உ. சி துறைமுகம் விரைவில் ஹைட்ரஜன் மையமாக மாறும் -துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.இராமச்சந்திரன்



தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சி  தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சங்கத்தின் தலைவர் ஆனந்த் மொராயிஸ் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் கவுரவ விருந்தினர் உரையாற்றினார். 

தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என். சுப்ரமணியன், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் குறித்து விளக்கி பேசினார். மேலும் கப்பல் முகவர்கள் விமானம் மூலமும் ஏற்றுமதி வணிகம் முன் வர  வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் தலைவர் டி. கே . இராமச்சந்திரன் பேசியதாவது, 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த  தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வ.உ.சி. துறைமுகம் கப்பல் முகவர்களுக்கும், 

ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கும் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக உயர்த்தும் நடவடிக்கைகளை நிர்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. 

தூத்துக்குடியைச் சார்ந்த கப்பல் சார்ந்து  வணிகம் செய்பவர்கள் அனைவரும் இதற்கான முயற்சிகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கனவில் கூட சரக்கு பெட்டக பரிமாற்ற மையம் பற்றிய நடவடிக்கைகளே வருகிறது. சமீபத்தில் நடந்த நிர்வாக சபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில்... சரக்கு பெட்டக பரிமாற்ற மைய திட்டத்திற்கு ரூ. 7 ஆயிரம் கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பிரேக்வாட்டர், கப்பல் தளம், துறைமுகம் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் அடங்கியுள்ளன. முதலில் 16.5 மீட்டர் அடுத்து 18 மீட்டர் ஆழபடுத்தும் பணி எதிர்வரும் காலத்தில்  நடைபெறும். வ.உ.சி துறைமுகம் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது. 

40 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாண்டு 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்று கூறினார். வ.உ.சி துறைமுகம் விரைவில் ஹைட்ரஜன் மையமாக மாற உள்ளது. இதுவரை 6 பெரிய நிறுவனங்கள் இதற்கு தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர். மற்ற துறைமுகங்கள் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுக்களை கையாளும் திறன் கொண்டுள்ளன. 

தூத்துக்குடி துறைமுகத்தில் எல்.பி.ஜி. எரிவாயு மட்டுமே கையாளும் வசதி உள்ளது. பெட்ரோலிய பொருட்கள்  கையாளுதலை தவற விட்டு விட்டோம். ஆனால் ஹைட்ரஜன் கையாளுதலை தவற விடமாட்டோம். இதற்கான அனைத்து வசதிகளும் துறைமுகத்தில் உள்ளன என்று பேசினார். 

எதிர்காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை துறைமுகமாக மாற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. என்.எல்.பி என்கிற இணைய வழி சேவை மூலம் கப்பல் முகவர்களுக்கு பல வசதிகளை செய்துகொடுக்க தயாராகி வருகிறோம். கப்பல் வணிகம் சார்ந்து தொழில் செய்பவர்கள் அனைவரும் அந்த மேம்பட்ட வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விரைவாகவும், எளிதாகவும், குறைந்த கட்டணத்தில் சேவை செய்யும் வகையில் பணியாற்றி வருகிறது என்ற அவர் துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப நகரத்தில் 5 நட்சத்திர விடுதிகள், பன்னாட்டு விமான சேவைகள் என பன்னோக்கு வளர்ச்சிக்கு வழி காண வேண்டும் என அவர் பேசினார்.

பின்னர் தூத்துக்குடியில் கப்பல் வணிகத்தில் பல ஆண்டுகள் கோலோச்சிவரும் ஜே.பி. ஜோ வில்லவராயர் மற்றும் பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கர் இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் டி.கே. இராமசந்திரன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

தொடர்ந்து சென்னை யூ.எம்.கே. குழுமத் தலைவர் என்னரசு கருணேசன், எதிர்காலத்தில் உலகளாவிய கப்பல் வணிகம் குறித்தும் இந்திய கப்பல் வணிகம் செல்ல வேண்டிய பாதைகள் குறித்தும் எடுத்துரைத்தார். தூத்துக்குடி ஸ்டூவிடோர்ஸ் சங்கத்தின் செயலாளர் ஜே. ஜேசையா வில்லவராயர், தூத்துக்குடி சுங்கத்  தரகர்கள்  சங்கத் தலைவர் செசில் மச்சாடோ, தூத்துக்குடி சரக்கு பெட்டக நிலைய சங்கத் தலைவர் செலஸ்டின் வில்லவராயர், 

தூத்துக்குடி பெட்டக பரிமாற்ற துறைமுக சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஜெயந்த் தாமஸ், தூத்துக்குடி காலி சரக்கு பெட்டக நிலைய சங்கத்தின் தலைவர் முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜே.பி. ஜோ வில்லவராயர் மற்றும் பி.எஸ்.டி.எஸ். வேல்சங்கர் இருவரும் ஏற்புரை வழங்கினார்கள். 

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு பவளவிழா மலரை சென்னை யூ.எம்.கே. குழுமத் தலைவர் என்னரசு கருணேசன் வெளியிட ஜோ வில்லவராயர் மற்றும் வேல்சங்கர் இருவரும் பெற்றுக்கொண்டார்கள். நிறைவாக தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

Previous Post Next Post