நெல்லை மற்றும் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக ரூ10.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டிடத்தை முதல்வர் மு. க .ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது சில பணியிடங்களில் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது என்றும் , அதனை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை வருகை பதிவேட்டில் அமைச்சர் மா சுப்பிரமணியன் எழுதியுள்ளார். ஆய்வின் போது கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கா.கருணாநிதி உடனிருந்தார்.