"திமுக மட்டும் மிகவும் புத்திசாலிதனமான சாதூர்யமான கட்சி என கருத வேண்டாம்" - கடுப்பான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இலவசங்கள் தொடர்பாக தி.மு.க.விற்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, 'திமுக மட்டும் மிகவும் புத்திசாலிதனமான சாதூர்யமான கட்சி என கருத வேண்டாம்' என உச்ச நீதிமன்ற நீதிபதி கடுப்பான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க., தரப்பு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

‘‘இந்த மனு, அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்தவர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை, இலவசங்கள் என கருத முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ எனக்கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வில், ‘‘எது இலவசம், எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை. இலவசம் வழங்குவது என்பது முக்கியமான பிரச்னை. இது குறித்த விவாதம் தேவை. நாட்டின் நலனுக்காக இந்த பிரச்னை கேட்கிறோம். புரிந்து கொள்ளுங்கள்.

இலவசங்கள் தொடர்பான விவகாரம் மிகவும் சிக்கலான பிரச்னை. தேர்தல் வாக்குறுதியோடு மட்டும் பார்க்காமல் மற்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் பார்க்க வேண்டும். கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் தருவது அவர்கள் கல்வி கற்று நன்மை அடையவே. மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடைகள் வழங்குவது வாழ்வாதாரத்தை முன்னேற்றும். கிராமப்புறங்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு இலவசங்கள் மிக முக்கியமானதாக உள்ளது. இது போன்ற திட்டங்களை கண்மூடித்தனமான இலவசங்கள் எனக்கூறவில்லை. இலவசங்கள் வேண்டாம் என கருதினால், அதனை தடுக்க மத்திய அரசே சட்டம் இயற்றலாம் என தெரிவித்தது.

தொடர்ந்து திமுக வழக்கறிஞர் வில்சனிடம் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘தி.மு.க., மட்டும் அறிவார்ந்த கட்சி என கருத வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் திமுக மட்டும் மிகவும் புத்திசாலிதனமான சாதூர்யமான கட்சி என கருத வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால், அது குறித்து அறியாமல் இல்லை’’ என்றார். தலைமை நீதிபதியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post